Thursday 31 January 2013

உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியுமா?



சொந்தமாக ஒரு தொழிலைத் துவக்க பெரிய பொருளாதார பலம், புகழ் பெற்ற குடும்பப் பின்னணி, நிர்வாக மேலாண்மை, கல்வி போன்றவைதான் அவசியமான அடிப்படைகள் என்பது பலரது எண்ணம்.

குறுந்தொழில்களும் சிறுதொழில்களும்தான் இன்று இந்தியப் பொருளாதாரத்தை இந்த அளவில் வளர்த்து, உலகத்தையே இந்தியாவை நோக்கி திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் உலகின் மற்ற பல நாடுகளைவிட இந்தியாவில்தான் மிகச்சிறிய அளவில் துவக்கப்பட்ட நிறுவனங்கள் பெருமளவில் வளர்ந்திருக்கின்றன. பல தனிப்பட்ட மனிதர்கள், தங்கள் கனவுகளை காட்சிகளாக்கித் தெரிந்த, கற்றுக்கொண்ட, தொழில், வியாபார உத்திகளை திறம்பட செயல்படுத்தி ஜெயித்திருக்கிறார்கள். அவர்களில் பலர் இந்த அடிப்படைகள் எதுவும் இல்லாதவர்கள்தான்.

சொந்தமாகத் தொழிலை சிறு அளவில் துவக்குகிறவர்கள் அனைவருமே, ‘வெற்றியை நோக்கிஎன்ற சிறுபுள்ளியிலிருந்துதான் துவக்குகிறார்கள். சிலர் ஜெயிக்கிறார்கள். சிலர் நடுவழியில் வளராமல் நிற்கிறார்கள். சிலர் தோற்கிறார்கள். ஏன் என்ற காரணங்களை ஆராய்ந்து பட்டியலிட்டிருக்கிறது சர்வதேச நிதி ஆணையத்தின் ஓர் அங்கம்.

அதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கியமான விஷயங்கள் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் துவக்க கட்டத்தில் செய்திருக்கும் தவறுகள், சிலவற்றில் மிகச் சிறிய தவறுகள் திருத்தப்படாமல் தொடர்ந்து கொண்டிருந்திருக்கின்றன என்பதும், தொழில்முனைவோருக்கு ஆரம்பத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமை என்பவைதான். வெற்றி பெற்றவர்கள் முதல் நிலையிலிருந்தே சரியாகச் செய்திருக்கும் சில விஷயங்கள் புதியவர்களுக்குப் பாடமாகின்றன.

அந்தப் பாடங்கள் நமக்குச் சொல்லுவது முக்கியமான இந்த 5 விஷயங்கள்:

அவைதான் சொந்தத் தொழில் துவக்கி, வெற்றி பெற்றவர்களின்தங்கவிதிகள்.

1.தெளிவான குறிக்கோள்
2. திட்டமிட்டு செயலாற்றும் திறன்
3. மனிதர்களை கையாளும் முறைகள்
4. பிரச்சினைகளை சந்திக்கும் பலம்
5. தொடர்ந்த தொலைநோக்குப் பார்வை

இவை உங்களுக்கு இருக்கிறதா?

வெற்றி பெறும் ஒரு தொழிலதிபருக்கான அம்சங்கள் உங்களுக்கு இருக்கின்றன என்றும், நிச்சயமாக தொழில்தான் செய்வது என்றும் நீங்கள் முடிவு செய்யும் முன் அதற்கான தகுதிகள் உங்களுக்கு இருக்கிறதா என்று நீங்களே உங்களை சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை அறிவியல் ரீதியாக, உளவியல் ரீதியாகச் செய்ய, உலகின் பல நாடுகளிலிருக்கும் பயிற்சி நிறுவனங்கள் தொடர்ந்து பல வழிகளில் முயற்சிக்கின்றன. அவற்றில் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில வழிகளை நாமும் இப்போது முயற்சிக்கப் போகிறோம். அதன் முதல் படியாகச் செய்ய வேண்டியவை,

1) இந்தத் தொடரை கவனமாக, இது நம் வாழ்க்கைக்கு உதவப்போகும் விஷயம் என்ற நம்பிக்கையுடன் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.

2) இன்றிலிருந்து தினசரி உங்கள் தொழில் கனவுகளை/ எண்ணங்களை ஒரு சிறிய நோட்டில் குறித்துக்கொண்டே வரவேண்டும். இந்தக் குறிப்புப் புத்தகம் நீங்கள் தொழிலைத் துவக்கிய பின்னரும் உங்களுடன் இருக்கப் போகும் மிக முக்கிய ஆவணம். இந்த நோட்டுப் புத்தகம் 6X4 என்ற அளவில் உறுதியான அட்டையுடன் கூடிய பைண்ட் செய்யப்பட்ட வரிகள் இடப்பட்ட பக்கங்களுடன் கூடிய நோட்டுப்புத்தகமாக 50 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். வடிவம், பக்கங்கள் இதெல்லாம் முக்கியமா எனக் கேட்கிறீர்களா? ஆம். அவசியம் எப்போதும் எளிதில் எடுத்துச் செல்ல, உங்கள் உடன் வைத்திருக்க வசதியாக இருக்கும் இந்தக் குறிப்புப் புத்தகத்திற்கு ஒரு பெயரையும் வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தொடரில் இதன் பெயர்நண்பன்.’ நீங்கள் விருப்பப்பட்ட பெயரையும் சூட்டிக்கொள்ளலாம்.

3) குறிப்புகள் சில வாக்கியங்களில் எளிமையாக - தேதியிட்டு, ‘இன்று எனது நிறுவனத்திற்கு பெயரை நிச்சயித்தேன்என்ற ரீதியில் எழுதிக் குறித்து வரவேண்டும். மிக முக்கியமான விஷயம், நேர்மையாக உண்மையானதை மட்டுமே எழுத வேண்டும். இதை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய அவசியமில்லை.

இந்தநண்பனில்எழுதத் துவங்கியதின் மூலம், உங்கள் தொழில் துவக்கும் பணியின் முதல் கட்டத்தை துவக்கிவிட்டிருக்கிறீர்கள்.

நீங்கள் ஒரு தொழிலை அல்லது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய முக்கியமான கேள்வி, ‘உங்களை உங்களுக்குத் தெரியுமா?’ இதென்ன அபத்தமான கேள்வி என்று எண்ணுகிறீர்களா? ‘நீ உன்னையறிந்தால்...’ பாடலை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகில் போராட மட்டுமில்லை, வெற்றிகரமாக ஒரு தொழிலைத் துவக்கவும் நீங்கள் உங்களைப் பற்றியே நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். தன் நண்பர்களின், ஆசிரியர்களின், உயர் அதிகாரிகளின், பெற்றோரின் பலங்களையும் பலவீனங்களையும் அறிந்திருக்கும் பலருக்குத் தெரியாத விஷயம் தன்னுடைய பலமும், பலவீனமும்தான். அதை, தான் தெரிந்துகொள்ளவே இல்லை. தெரிந்துகொள்ள முயற்சித்ததும் இல்லை என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. வாரத்தில் இரண்டு நாட்கள் பணியில் சேர வருபவர்களைத் தேர்ந்தெடுக்க நேர்முகம் செய்யும் ஒரு மனித வள அதிகாரி, நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் பலரும் சரியாகப் பதில் சொல்லாமலிருக்கும் ஒரு கேள்வி, ‘உங்கள் பலம்/பலவீனம் பற்றிச் சொல்ல முடியுமா?’ என்றுதான் என்கிறார்.

இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதில்தான் உங்களுக்குத் தொழில் செய்யும்தகுதிகள்இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்த்துக்கொள்ள உதவப் போகிறது. கவனியுங்கள், பதில்கள் மூலம் அந்தச் சோதனைக்கு உங்களை உட்படுத்திக்கொள்ள முடியுமா என்பதைத்தான் அறிய முடியுமே தவிர, உங்கள் தொழில் செய்யும் தகுதிகளை இந்தப் பதில்கள் மட்டும் தீர்மானிக்காது. இந்தப் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாகத்தான் நீங்கள் உங்கள்தகுதிகளைசோதித்து தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்.

உங்கள் பலங்கள் என்று நீங்கள் கருதுவதில் 10 ஒரு தாளில் பட்டியலிடுங்கள்.

இங்கு பலம் என்று சொல்லப்படுவது, உங்கள் மனதில் நீங்கள் நினைப்பது மட்டுமே. மற்றவர்கள் உங்களைப்பற்றிச் சொல்பவை இல்லை. ஒரே நாளில் சிலரால் இதைச் செய்ய முடியாது. ஆழ்ந்து சிந்தியுங்கள். நேரம் எடுத்துக்கொண்டு நன்றாக யோசித்து, எழுதுவதை நேர்மையாக எழுதுங்கள்.

1) நிறைய நண்பர்கள்
2) வேகமாகக் கணக்கிடமுடியும்
3) சொல்லப்பட்ட விஷயத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்
4)முடிவுகளில் தீர்மானமாக இருப்பவர்கள்.

இப்படிப்பட்ட உங்களின் குணாதிசயங்கள் பலங்கள். பட்டியல் பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதாதீர்கள். நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது உங்கள் வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் ஒரு விஷயத்தை என்பதை மனதில் நிறுத்தி நேர்மையாக எழுதுங்கள். அதே தாளில் அடுத்த கட்டமாக உங்கள் பலவீனங்களை பட்டியல் இடுங்கள்.

1) வேகமாக ஆங்கிலத்தில் பேசமுடியாது
2) பிறரால் சொல்லப்படும் விஷயத்தை மறுக்கத் தயக்கம்
3)எளிதில் உணர்ச்சி வசப்படுவேன்
4) முகங்களையும் பெயர்களையும் மறந்துவிடுவேன்.
5) என் பிரச்சினைகள்

உடன் இருப்போரையும் பாதிக்கும் போன்ற இப்படிப்பட்ட விஷயங்களை பலவீனமாகப் பட்டியல் இடுங்கள். இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், இந்தப் பட்டியல் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமையாது. உங்களுடைய பலம், மற்றவர் பார்வையில் பலவீனமாக இருக்கலாம். அதேபோல் நீங்கள் பலவீனமாகக் கருதும் விஷயம், மற்றொருவருடைய பலமாகக்கூட இருக்கலாம்.

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப் பட்டிருக்கும் சொந்தத் தொழில் செய்து வென்றவர்களின் தங்க விதிகளைப் பின்பற்ற, இப்போது நீங்கள் உங்களுடைய பலங்களாகப் பட்டியலிட்டிருக்கும் விஷயங்களில் குறைந்தபட்சம் 5ஆவது உதவுமா? அப்படியானால், உங்களால் சொந்தமாகத் தொழில் செய்து வெற்றி அடைய முடியுமா என்ற சோதனையை நீங்களாகவே செய்து பார்த்துக்கொள்ள முடியும். அதை எப்படிச் செய்வது என்பதை அடுத்த வாரம் அறிந்துகொள்வோம்.

இன்று நண்பனில் எழுதவேண்டியது!

தொழில் துவக்க ஆர்வம் மட்டும் போதாது, அறிவியல் ரீதியாக நமக்கு அதற்குள்ள தகுதிகளை சோதித்து அறிந்துகொள்ள வழிகள் இருப்பதை தெரிந்து கொண்டேன்

No comments:

Post a Comment